பெண்கள் அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி கோளாறு. சரியான சுழற்சி ஏற்படாத காரணத்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால் உடல் பருமன், குழந்தை பெற்றேடுப்பதில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. சரி, இந்த பிரச்னையை வீடு வைத்தியம் கொண்டும் எளிதில் போக்கலாம். அதற்கு பனங்கற்கண்டை உண்டு வரலாம். சரி, பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
மாதவிடாய் பிரச்சனை உள்ள இளம்பெண்களுக்கு பனங்கற்கண்டு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. எள்ளு கசாயத்தில், திரிகடுகு மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து பருகி வந்தால் மாதவிடாய் சீராகும்.
நீண்ட நாட்களாக வயிற்றுப் புண் மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதியுறும் நோயாளிகள், பனங்கற்கண்டை கொத்தமல்லி கசாயத்துடன் கலந்து பருகினால் விரைவாக குணம் அடையலாம்.
சளி தொந்தரவுகள் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், திரிகடுகு கசாயத்தில் பனங்கற்கண்டு கலந்து பருகலாம்.
நீரிழிவு நோயாளிகள் நெல்லிச் சாறுடன் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் அந்த நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
சுவாசம் மற்றும் சைனஸ் தொந்தரவு உடையவர்கள் பாலில் பனங்கற்கண்டு, சிறிதளவு சுக்குப்பொடி மற்றும் மஞ்சள்பொடி சேர்த்து பருகி வரலாம்.
மருந்துகள் சாப்பிட்ட பின்பு வாயில் கசப்புத்தன்மை தோன்றினால், சிறிதளவு பனங்கற்கண்டை சாப்பிட்டால் கசப்புத்தன்மை நீங்கும். அதேபோல் மருந்துகளை பாலில் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்தால், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டை சேர்த்து குடிப்பது நல்லது.
பாலில் தேவையான அளவு பனங்கற்கண்டு, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பருகி வந்தால் உடலுக்கு உற்சாகமும் நிறைவான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். மேலும் இரவில் நல்ல தூக்கத்தை அளிக்கும்.