அப்பப்பா.. வெயில் மண்டையை பிளக்குதே என்று வாடும் மக்களின் குரல் கேட்கிறது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியர்வை அதிகமாகிறது. இது நாளடைவில் உடம்பில் வியர்க்குருவாக மாறுகிறது. இதனால் உடலு முழுவதும் குத்தும், எரிச்சலை உண்டாக்கும். சரி வியர்க்குருவை போக்க சில டிப்ஸ் குறித்து பார்ப்போம்.
தினமும் குறைந்தது இரண்டு முறை குளிக்கவேண்டும். கேலமைன் (calamine)லோஷன் தடவுவது நல்லது.
நல்ல காற்றோட்டமான அறையில் இருந்தால், தோலில் ஏற்படும் அடைப்பு சரியாகிவிடும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்க்ரீன் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது நல்லது.
இளம் சூடான நீரில் உள்ளங்கைகள், பாதங்களை 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் வியர்வை குறையும். வியர்வையை அழுத்தித் துடைக்காமல், மிருதுவான துணியால் ஒத்தி எடுக்கவேண்டும். இது தற்காலிகத் தீர்வுதான்.
சித்த மருத்துவத்தில் தீர்வு தேடுவோர் 100 கிராம் செண்பகப்பூ, ரோஜா மொட்டு, பொன் ஆவாரம்பூ, தவனம் போன்ற பூக்களை உலர்த்தி, அத்துடன் கடலைப் பருப்பு சம அளவு எடுத்து, சிறிதளவு வெட்டிவேர், சந்தனம், வெள்ளரி விதை, முல்தானி மட்டி, கால் கிலோ பயத்தம்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தினமும் தேய்த்துக் குளிக்க, வியர்வை நாற்றம் நீங்கும்.
வியர்வையில் பூஞ்சைகள் வளரக்கூடும். அதனால், குளித்து முடித்ததும் வியர்க்குரு பவுடர் போடுவதன் மூலம் இதுபோன்ற பூஞ்சைப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கக் கூடாது. டியோடரன்ட், சென்ட், க்ரீம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.