குளிர்காலத்தில் வறளும் கண்கள்: எவற்றை சாப்பிடலாம்?

by SAM ASIR, Dec 5, 2020, 20:57 PM IST

நம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவைதாம். ஆனால், அதிக கவனமாகப் பேண வேண்டியவை என்று சில உறுப்புகள் உள்ளன. கவனக்குறைவாக இருந்தால் அவற்றின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அவற்றுள் ஒன்று கண். பார்வை நமக்கு மிகவும் முக்கியம். கண்களில் ஏற்படும் பார்வை திறன் குறைவு, புரை, வறட்சி ஆகியவை நம்மைப் பாதிக்கக்கூடியவையாகும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் கண்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

பருவநிலை மாற்றமும் கண்களில் பாதிப்புண்டாக காரணமாக இருக்கக்கூடும். சில மறைவான காரணங்கள் இருந்தாலும், காற்றில் குறைவான ஈரப்பதம், அதிக குளிர், அதிகமாக வீசும் காற்று இவை கண்களில் வறட்சி ஏற்படக் காரணமாகின்றன. போதுமான கண்ணீர் சுரக்காததும் கண்களை வறளச் செய்யக்கூடும். கண்கள் வறண்டிருப்பதாக மருத்துவர் கண்டுபிடித்தால் அதற்கென சொட்டு மருந்துகளைத் தருவார். மருத்துவரின் ஆலோசனையை கடைப்பிடிப்பது அவசியம். ஆனால், அது தேவைப்படாத அளவுக்குக் கண்களை ஈரத்துடன் வைத்துக்கொள்ள சில பழங்கள் உதவுகின்றன. குளிர்காலத்தில் இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் கண்களைக் குளிர்கால பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை செய்யும். இணைப்பு திசுக்களை ஒருங்கிணைத்துப் பராமரிப்பதில் வைட்டமின் சி சத்து நன்கு செயல்படுகிறது. ஆகவே ரத்தநாளங்கள் ஆரோக்கியமாகக் காக்கப்படுகின்றன. கண்களில் வரக்கூடிய விழித்திரை (ரெட்டினா) பாதிப்புகளை நெல்லிக்காய் குறைக்கும்.

ஆரஞ்சு

கண்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படக்கூடும். இதைத் தவிர்ப்பதற்கு ஆரஞ்சு உதவும். ஆரஞ்சு பழத்தில் அதிக வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் அதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் கண்களுக்குத் தேவையான நீர் கிடைக்க உதவுகிறது. இதன் காரணமாகக் கண்கள் வறளுவது தவிர்க்கப்படுகிறது.

கொய்யா

கொய்யா, குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழம். இதில் அதிக அளவில் ஊட்டசத்துகள் உள்ளன. வயது காரணமாகக் கண்களில் பாதிப்பு ஏற்படுவதை இது தாமதிக்கச் செய்கிறது. கண் பார்வை திறனை அதிகரிக்கிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ சத்தும் பீட்டா கரோடினும் உள்ளது. இவை இரண்டுமே கண்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையானவை. பீட்டா கரோட்டின் பார்வை திறனை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ, கண் வறட்சியைத் தடுக்கிறது.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. கண்களின் நரம்புகள் சேதமடையாமல் இது தடுக்கிறது. ஆகவே, பசலைக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது குளிர்காலத்தில் கண்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

You'r reading குளிர்காலத்தில் வறளும் கண்கள்: எவற்றை சாப்பிடலாம்? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை