குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம். ஆனால், குளிர்காலத்தில் உப்பு குறைவாக இருக்கும் பண்டங்கள், உணவு பொருள்களைச் சாப்பிடுவதில் கவனமாக இருக்கவேண்டும். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று கூறுவர். ஆனால், குளிர்காலத்தில் உப்பை தவிர்ப்பது முக்கியம்.
கோடைக் காலத்தை போலன்றி, குளிர்காலத்தில் நமக்கு அதிகமாக வியர்க்காது. வியர்வை வெளியேறாத காரணத்தால் உடலுக்குள் உப்பு தங்கும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இருதயம் இரத்தத்தை அழுத்தி அனுப்பும் செயல்பாடு குறைவாக இருப்போருக்கு (LV dysfunction) திரவத்தின் அளவு அதிகமாகி இதய செயலிழப்பு நேரிடும் அபாயம் உண்டு. குளிர்காலத்தில் அதிக உப்பு சேர்ப்பது இதயம் தொடர்பான ஆரோக்கிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
நம் உடலில் சோடியம் அதிக அளவில் சேருவதைத் தடுப்பதற்குப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். நொறுக்கு தீனிகள், உப்பு பிஸ்கட்டுகள் உள்ளிட்டவற்றைச் சாப்பிடக்கூடாது. உணவைக் கெடாமல் பாதுகாப்பதற்கு சோடியம் சேர்க்கப்படும். ஆகவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது ஆரோக்கியமானது.
உப்பு டப்பாவுக்கு நோ
சாப்பாட்டு மேசையில் பலவித பொருள்களை வைத்திருப்போம். குளிர்காலத்தில் அதில் உள்ள உப்பு தூவும் கலனை எடுத்துவிடவேண்டும். சாப்பாட்டில் உப்பு குறைவாக இருக்கிறது என்று எண்ணி உடனடியாக உப்பைச் சேர்க்கும் வாய்ப்பை இது தவிர்க்கும். உப்பு டப்பாவுக்கு நோ சொன்னால் தினமும் உடலில் சேரும் சோடியத்தின் அளவு இயல்பாகவே குறைந்துவிடும்
சுவைக்கு வேறு பொருள்கள்
உணவுக்கு சுவை கொடுப்பதில் உப்பு முதலிடம் பெறுகிறது. அதில் ஐயமில்லை. ஆனால், குளிர்காலத்தில் உப்பைத் தவிர்ப்பதற்காக எலுமிச்சை, மிளகு, வெள்ளைப்பூண்டு, துளசி ஆகியவற்றைச் சுவைக்காக உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உப்பைக் குறைக்கவேண்டும் என்பதற்காக ருசியே இல்லாமல் சாப்பிடவேண்டிய அவசியம் இல்லை. மற்ற சுவையூட்டிகளைப் பயன்படுத்தி சுவையாகச் சமைக்கலாம்.
தண்ணீரில் அலசுங்கள்
சில நேரங்களில் கெடாமல் பதப்படுத்தப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும். உதாரணத்திற்கு டின்களில் அடைக்கப்பட்ட சமையல் பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கினால் அவற்றைச் சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் நன்கு அலச வேண்டும். அலசி, தண்ணீரை வடிப்பதன் மூலம் பெரும்பகுதி சோடியத்தை நீக்கிவிடலாம்.
குளிர்காலத்தில் எவற்றைச் சாப்பிடலாம் என்ற பட்டியலைத் தயாரிக்கவேண்டுமானால், சோடியம் இல்லாத அல்லது குறைவான உணவுப் பொருள்கள் எவை என்று அறிந்து வைத்துக்கொள்ளவேண்டும். சோடியம் குறைவான உணவுகளைச் சாப்பிட்டால் குளிர்காலத்தில் உடல் நலம் கெட்டுப்போகாமல் ஆரோக்கியத்தை அனுபவிக்கலாம்.