கோவிட்-19 பெருந்தொற்று நுரையீரல் மற்றும் இருதயத்தையே அதிகம் பாதிக்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான முடிவினை அறிவித்துள்ளார்கள். பொதுவான நம்பிக்கையிலிருந்து இம்முடிவு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
நாக்பூர், பாட்னா, தேவ்கர், ஹைதராபாத், சண்டிகார் உள்ளிட்ட ஐந்து நகரங்களின் வெவ்வேறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த உடற்கூறியல் வல்லுநர்கள் இணைந்த குழுவானது கோவிட்-19 நோயாளிகளின் பல்வேறு உறுப்புகளில் உள்ள திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தது. 45 ஆராய்ச்சி வெளியீடுகளையும் இக்குழு பரிசீலித்தது.
கோவிட்-19 முக்கிமாக சுவாசம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலங்களை பாதித்தாலும், இதயம், சிறுநீரக பாதை, குடல், இனப்பெருக்கம், நரம்பு மண்டலங்களையும், தோல், கூந்தல், நகம் ஆகியவற்றையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, வேறு உடல்நல பாதிப்புகள் உள்ள முதியவர்களுக்கு இந்த அபாயம் அதிகம். சிறுநீரகங்கள், இதய மற்றும் இரத்த நாளங்கள், ஈரல், கணையம் ஆகியவற்றை கோவிட்-19 பாதிக்கிறது. வைரஸ் தன்னை பாதித்தவரின் செல்களோடு இணைக்கும் ஏசிஇ-2 ஏற்பிகளோடு தொடர்புடைய மனித புரதம், சிறுகுடல், டியோடினம், பெருங்குடல், சிறுநீரகம், விரைகள், பித்தப்பை, இதயம், தைராய்டு சுரப்பி, அடிப்போஸ் திசு, மலக்குடல் மற்றும் நுரையீரல் ஆகியவற்றில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறைந்த மற்றும் நடுத்தர பாதிப்புகள் உள்ளவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு தொண்டை வலி, காய்ச்சல், சுவாச பாதிப்பு உண்டாகும். தீவிர பாதிப்பு உள்ளோருக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு சுவாச பாதிப்பு ஏற்படுகிறது. நுரையீரல் மற்றம் இருதய பாதிப்புகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு சிறுநீரகம் அதிகமாய் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆகவே, கோவிட்-19ல் ஆண்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
தொற்றின் ஆரம்ப காலத்தில் சுவாச குழல், செரிமான குழல், சிறுநீரக பாதை, வியர்வை சுரப்பி ஆகியவற்றின் வெளியே வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்தனர். சுவாச மண்டலத்தின் வழியாக வைரஸ் பரவுவதாக நம்பியதால் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியும் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது. இப்போது சுவாச மண்டலத்தோடு, மலம், சிறுநீர் மற்றும் தோலின் வழியாகவும் வைரஸ் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.