கோடைக்காலம் என்றால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. வெளியே நடக்கவோ, வாகனத்தில் செல்லவோ முடியாத நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா என்ற கேள்வி எழுவது இயற்கை.
கோடைக்காலத்தில் எக்காரணம் கொண்டு உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட வேண்டாம். உடற்பயிற்சியை நிறுத்துவதற்கு வெயிலை காரணமாக கூறக்கூடாது. மாறாக பயிற்சி செய்யும்போது எவற்றை கவனிக்கவேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தால் போதும்.
வெளிப்புற வெப்பநிலையை கருத்தில் கொள்ளாமல் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் வியர்வை வெளியேறுவதுடன், ஹீட் ஸ்ட்ரோக் என்னும் வெப்பதாக்குதல், குமட்டல், தலைவலி மற்றும் நீர்ச்சத்து இழப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். கொளுத்தும் வெயிலில் அதிக நேரம் இருந்தால், உடலை இயற்கையானவிதத்தில் குளிர்விக்கும் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அசதியுண்டாகும்.
வெறுமனே அதிக நீர் மட்டும் அருந்துவது கோடைக்காலத்தில் பயன் தராது. வெயில் காலத்தில் நம் உடலில் இருந்து நீர் மட்டும் வெளியேறவில்லை. உடற்பயிற்சி செய்யும்போது வியர்வைல் எலெக்ட்ரோலைட் என்னும் தாதுகளும் வெளியேறுகின்றன. பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற எலெக்ட்ரோலைட்டுகளே நம் உடலில் திரவங்களின் அளவை சமநிலையில் பேணுகின்றன. உடல், எலெக்ட்ரோலைட்டுகளை இழந்தால் தசை பிடிப்பு, பெலவீனம், இதய படபடப்பு, பக்கவாதம் சில வேளையில் இதய செயலிழப்பால் மரணமும் கூட நேர்ந்திடும் அபாயம் உண்டு.
கோடைக்காலத்தில் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்ய கவனத்தில் கொள்ளவேண்டியவை
பகல் நேரத்தில் கூடாது
காலை 10 முதல் மாலை 3 மணி வரைக்கும் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள், சூரியன் மறைந்த பிறகு செய்யலாம். காற்று மண்டலத்தில் ஓசோன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக அல்லது காற்று மாசு அதிகம் இருப்பதாக வானிலை எச்சரிக்கை செய்யப்பட்டால் அன்று வெளியில் செல்லாமல் வீட்டினுள்ளே பயிற்சிகளை செய்யலாம்.
இறுக்கமான ஆடை கூடாது
இறுக்கமான ஆடைகளை அணிந்து உடற்பயிற்சி செய்தால் உடல் விரைவிலேயே வெப்பமாகி விடும். அது அசௌகரியத்தை கொடுக்கும். மூச்சுவிட சிரமம் ஏற்படும். தளர்வான ஆடைகளை மட்டுமே அணிந்தால், காற்று உள்ளே புக முடியும். அடர் நிற ஆடைகள் வெப்பத்தை உள்வாங்கும். வெளிர் நிற ஆடைகள் வெப்பத்தை எதிரொளிக்கும். வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளை அணிந்து உடற்பயிற்சி செய்வது நல்லது.
தண்ணீர் பாட்டில்
கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்ய வீட்டைவிட்டு வெளியேறும்போது இரண்டு தம்ளர் நீர் அருந்திவிட்டு செல்லலாம். கையில் தண்ணீர் நிறைந்த பாட்டில் வைத்திருப்பது அவசியம். உடற்பயிற்சியின் இடையில் அவ்வப்போது சிறிது நீர் அருந்தலாம். உடற்பயிற்சி முடித்த பிறகு அதிகமாக நீர் பருகவேண்டும். எலெக்ட்ரோலைட்டுகள் உடலில் சேரும்வண்ணம் பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ் அருந்தவேண்டாம்.
வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள், சன் ஸ்கிரீன் என்னும் பூச்சுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. கோடையில் உடற்பயிற்சி செய்யும்போது இதய படபடப்பு ஏற்பட்டால், பெலவீனமாக உணர்ந்தால், தலைவலி அல்லது மயக்கம், வாந்தி பண்ணும் உணர்வு வந்தால் உடனடியாக ஓய்வு எடுப்பது அவசியம். தண்ணீரோ அருந்துதல், உடல் புத்துணர்வு அடைவதற்காக பழங்கள் அல்லது சிற்றுண்டி சாப்பிடலாம்.