குளிர்காலம் வந்து விட்டால் ஒட்டிப் பிறந்ததுபோல கூடவே சில உடல் நல தொல்லைகளும் வந்து விடும். தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல், சளி ஒழுகுதல், வறட்டு இருமல் ஆகியவை வரக்கூடும்.
இவற்றையெல்லாம் 'ஜலதோஷம்' என்று சிலர் அழைக்கின்றனர்.
வீட்டில் அல்லது அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்ற சில தாவரங்கள் அவற்றின் விளைபொருள்களை பயன்படுத்தி சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.
வீட்டு மருந்துகள்:
ஆவாரை வேர்: அதிகமாக சளி பிடித்து, தலை கனத்துக் கொண்டிருந்தால் ஆவாரை வேரை நெருப்பில் சுட்டு, வெளிப்படும் புகையை சுவாசிக்க வேண்டும். இப்படி செய்தால், சளி வெளியேறுவது அதிகமாகி, பிறகு பூரணமாக குணம் கிடைக்கும்.
ஓமம்: மூக்கடைப்பு தொல்லை இருந்தால் ஓம விதைகளை துணி ஒன்றில் முடிச்சு போன்று கட்டி, நேரடியாக மூக்கில் வைத்து அதன் மணத்தை இழுத்து சுவாசிக்க வேண்டும். மூக்கில் ஏற்படும் அடைப்பினை இது சரி செய்யும்.
இலவங்கப்பட்டை: இலவங்கம், மிளகு மற்றும் தேன் ஆகியவற்றை நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி அருந்தினால் தொண்டை வலி குறையும். சளித்தொல்லை அதிகமாகாமல் தடுக்கலாம்.
சீரகம்: சளி, தொண்டை வலி, காய்ச்சல் இவற்றிற்கு சீரகம் நல்ல மருந்தாகும். இதிலுள்ள நோய் எதிர்ப்புத் தன்மை உடல்நலக் குறைபாடுகளை நீக்கும்.
உணவு கட்டுப்பாடு:
குளிர்காலத்தில் சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், ஒருநாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் பட்டினி இருக்கலாம். அப்போது உடலிலுள்ள அனைத்து நச்சுத்தன்மை கொண்ட பொருள்களும் வெளியேறும். சளித்தொல்லை இருக்கும் நாட்களில் வேக வைத்த காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிடலாம். காய்கறி வடிசாறு (soup) அருந்தலாம். பொதுவாக செரிக்க சிரமமான உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் வாசனை பொருள்கள் கலந்த உணவு, பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நலம். எந்த உணவையும் சூடாக சாப்பிடுவது தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
இந்தக் குறிப்புகள் சாதாரணமாக கடைப்பிடிக்கக்கூடியவை. தீவிர உடல் நல குறைபாடுகளுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.