மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.
17-வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம், சட்டீஸ்கர், கேரளா, தமிழ்நாடு, மே.வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 184 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின்படி, பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காந்தி நகர் தொகுதி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் சொந்தத் தொகுதியாகும். 1989 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அத்வானிக்கு 92 வயதாகிவிட்டதை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உ.பி.தலைநகர் லக்னோவிலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலும் போட்டியிடு கின்றனர்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் இந்த முறையும் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது எம்.பியாக உள்ள 15 பேரில் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் சட்டீஸ்கர் மாநிலத்தில் சிட்டிங் எம்.பி.க்கள் யாருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.