இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான வர்மா படம் ரிஜெக்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட புது வெர்ஷன் ஆதித்யா வர்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தற்பொழுது தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முதலில் பாலா இயக்க வர்மா என்கிற பெயரில் படம் முழுமையாக தயாரானது. ஆனால் தயாரிப்பு தரப்புக்கு த்ருப்தி தராததால் படம் கைவிடப்பட்டது. அதுமட்டுமின்றி, மீண்டும் வர்மா இயக்கப்படும் எனவும், புதிய நடிகர்கள் நடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆதித்யா வர்மா என்கிற பெயரில் துருவ் விக்ரம் நடிக்க படம் தற்பொழுது படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக பனிடா சாந்து ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தை அர்ஜூன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரிசாய்யா இயக்குகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிகின்றனர்.
துருவ் விக்ரமுக்கு தந்தையாக இயக்குநர் கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, படத்தை விரைவில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.