கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் அங்கும் பாஜக தரப்பில் ஸ்மிருதி இரானியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இந்த முறையும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் காண்கிறார். இந்த முறை கூட்டணி அமைத்துள்ள உ.பி.யின் இரு பெரும் கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அமேதி தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனாலும் பாஜகவுடனான போட்டி இம்முறை ராகுல் காந்தி சரியான சவாலாக இருக்கும் என்பதால் தென் மாநிலங்களில் ஒரு தொகுதியில் ராகுலை நிறுத்தி வெற்றி பெற வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அதன்படி கேரள மாநிலம் வயநாடு தொகுதி காங்கிரசுக்கு பாதுகாப்பானது. அங்கே ராகுல் போட்டியிட வேண்டும் என கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் அழைப்பு விடுக்க அத்தொகுதி இப்போதே விஐபி அந்தஸ்தாகி விட்டது.
கேரளாவில் இம்முறை பாஜகவும் தன் பலத்தை காட்ட தீவிரமாக களத்தில் குதித்துள்ளது. இம்முறை கேரளாவில் கூட்டணி அமைத்துள்ள பாரத் தர்ம ஜன சேனாவுக்கு வயநாடு தொகுதியை ஒதுக்கியிருந்தது. ஆனால் ராகுல் போட்டியிட்டால் அவரை எதிர்த்து பாஜகவே ஒரு விஐபி வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த விஐபி வேட்பாளர் வேறு யாருமில்லையாம். அமேதியில் ராகுலுக்கு எதிராக மல்லுக்கட்டும் சாட்சாத் அதே ஸ்மிருதி இரானி தான் என்று கேரள பாஜக தரப்பில் அடித்துச் சொல்கின்றனர்.