பிரதமர் மோடி படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் திடீர் தடை!

Election Commission bans screening of biopic on PM Modi

by எஸ். எம். கணபதி, Apr 10, 2019, 15:14 PM IST

பிரதமர் மோடியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் பா.ஜ.க. மீறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவ வீரர்களின் படத்தையோ, ராணுவத் தாக்குதல்கள் குறித்தோ இடம் பெறக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. ஆனாலும், பா.ஜ.க.வினர் அதை பொருட்படுத்தாமல் பேசுகின்றனர்.

இந்நிலையில், ‘‘பி.எம். நரேந்திரமோடி’’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் முதல் பிரதமரானது வரையான காட்சிகள் அடங்கிய திரைப்படத்தை தயாரித்துள்ளனர். நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஓமாங்குமார் இயக்கியிருக்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குவதும், அதற்கு பிரதமரின் உறுதியான செயல்பாடுதான் காரணம் என்றும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 5- ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் பிரச்சாரத்திற்காகவே இந்த படத்தை தயாரித்து தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வெளியிடுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தை திரையிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதன் காரணமாக, படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்பு, படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை பிரிவு இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில், படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடாமல் தள்ளி வைப்பதற்கு தேர்தல் ஆணையத்தில்தான் முறையிட வேண்டுமென்றும் கூறியது.

ஒரே சமயத்தில் 23 மொழிகளில் தயாராகியுள்ள பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன.
அது மட்டுமின்றி, சலாஹூதீன் அகமது, அம்ப்ரோஸ் உள்பட ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறியிருந்தனர்.

இதற்கிடையில், பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட மத்திய திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளித்தது. இதனால், ஏப்ரல் 11-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்த சூழலில் படத்தை வெளியிடத் தடை விதிப்பது தொடர்பான புகார்களில் படக்குழுவினருக்கும், பா.ஜ.க.வுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு விளக்கம் பெற்ற நிலையில், தேர்தல் ஆணையம், படம் வெளியாவதற்கு முதல்நாளில்(ஏப்.10) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், ‘‘எந்தக் கட்சிக்கும் பாரபட்சம் இல்லாத வகையில் தேர்தல் நடைபெற வேண்டும். எனவே, தனிப்பட்ட ஒருவரையோ, ஒரு கட்சியையோ புகழும் வகையிலான படத்தை தேர்தல் முடியும் வரை தியேட்டர்களிலோ, மின்னணு ஊடகங்களிலோ ஒளிபரப்பக் கூடாது. இதில் புகார்கள் ஏதும் வந்தால், அதை உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு ஆராயப்படும்’’ என்று கூறியிருக்கிறது,

You'r reading பிரதமர் மோடி படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் திடீர் தடை! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை