ஐபில் போட்டியின் நேரம் நீள்கிறது...சோர்வில் விமான நிலையத்தின் தரையில் படுத்துறங்கிய தோனி

ஐபிஎல் போட்டியை முடித்து, ஊர் திரும்ப சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற தோனி, அங்கே தரையில் சோர்வாக படுத்துறங்கினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. இதில், 108 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிந்து ஊர் திரும்ப சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள். அப்போது, விமானத்துக்காக காத்திருக்கையில் போட்டியின் சோர்வு காரணமாக அணியின் கேப்டன் தோனி சற்று நேரம் தரையில் சோர்வாக படுத்துறங்கியுள்ளார். அந்த சமயத்தில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த தோனி, கூடவே ஒரு கேப்ஷனையும் பதிவு செய்திருக்கிறார்.

அதில், ‘ஐபிஎல் டைமிங்க்கு பழக்கப்பட்ட பிறகு, அதிகாலை விமானம் என்றால் இதுதான் நடக்கும்’ எனப் பதிவு செய்திருக்கிறார். தோனியின் இந்த பதிவு, தற்போது நடைபெறுகின்ற ஐபிஎல் போட்டியின் நேரம் நீட்டிக்கப்படுவதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, இந்த சீசனில் எல்லா ஐபிஎல் போட்டிகளும் குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்து கொண்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரஹானே, மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.  

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்