இந்திரா காந்தி பேரன் ரூ.38 ஆயிரம் பாக்கி: தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் போட்டு கொடுத்த பி.எஸ்.என்.எல்

varungandhi has due for telephone service- bsnl complaint to election commission

by Subramanian, Apr 11, 2019, 15:45 PM IST

இந்திரா காந்தி பேரன் வருண் காந்தி ரூ.38 ஆயிரம் தொலைபேசி கட்டணம் பாக்கி வைத்து இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சின்ன மருமகள் மேனகா காந்தியும், மேனகாவின் மகன் வருண் காந்தியும் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். எதிர்வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக மேனகா காந்தியும், பிலிபட் தொகுதியில் வருண் காந்தியும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் அரசு துறைகளின் தடையில்லா சான்றும் இணைக்க வேண்டும். தடையில்லா சான்று இல்லாமல் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு பழைய பாக்கியை வசூலிக்க நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

2009-14 கால கட்டத்தில் பிலிபிட் மக்களவை தொகுதி உறுப்பினராக வருண் காந்தி இருந்தபோது, அவரது அலுவலக பயன்பாட்டுக்காக தொலைபேசி மற்றும் இணையதள இணைப்பை பி.எஸ்.என்.எல். நிறுவனம் கொடுத்தது. தொலைப்பேசி மற்றும் இணையதள இணைப்பு பயன்படுத்தியதற்காக வருண் காந்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கட்டணமாக ரூ.38,616 செலுத்த வேண்டும். ஆனால் அவர் செலுத்தவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனமும் பல முறை பாக்கி தொகை தரும்படி கடிதம் அனுப்பியது. ஆனால் அவர் பாக்கியை செலுத்தவில்லை.

தற்போது தொலைப்பேசி நிலுவை தொகை விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் புகாராக பி.எஸ்.என்.எல். நிறுவனம் கொடுத்துள்ளது. மேலும், பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தியின் வேட்பு மனுவுடன், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் தடையில்லா சான்று இல்லாவிட்டால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறியுள்ளது.

You'r reading இந்திரா காந்தி பேரன் ரூ.38 ஆயிரம் பாக்கி: தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் போட்டு கொடுத்த பி.எஸ்.என்.எல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை