தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுங்க- அனைத்து கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு....

political parties submit details of electoral bond donations to the Election Commission parties

by Subramanian, Apr 12, 2019, 12:36 PM IST

மே 30ம் தேதிக்குள், தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை, அதனை கொடுத்தவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சீலியிடப்பட்ட கவரில் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மக்கள் பிரதிநிதிச்சட்டம் (1951) பிரிவு (29ஏ)ன் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள், போட்டியிடும் தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளை பெறும்போது அவைகளுக்கென வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு அவை தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். இந்த வங்கி கணக்கில்தான் கட்சிகள் தங்களது முழு வரவு செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.

முன்பு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை வாங்கினால் கட்சிகள் அதனை கணக்கில் காட்டியாக வேண்டும். மேலும், அதனை யார் கொடுத்தா? எப்போது கொடுத்தது என்று கேள்விகளை கேட்டு தேர்தல் ஆணையம் குடைச்சல் கொடுக்கும். அதனால் பல அரசியல் கட்சிகள் நன்கொடை தகவல்களை மறைப்பது உண்டு. இதனை தடுக்க தேர்தல் பத்திரம் சட்டம் 2017ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அந்த சட்டத்தின்படி, தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகள் அனைத்தும் வங்கிகள் கண்காணிப்பிலே நடைபெறும். கருப்பு பணத்தை நன்கொடையாக பெறுவதும், ஒரு கட்சிக்கு நன்கொடை அளித்த தனிநபர் அல்லது நிறுவனத்தை மற்ற கட்சிகள் மிரட்டி பணம் பறிப்பதும் தடுக்கப்படும். இருப்பினும் இதில் சில குறைப்பாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், தேர்தல் பத்திரம் சிஸ்டம் தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையை சீர்குலைக்கும் என்று உச்ச நீதீமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விவகாரம் குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம். மேலும் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்வோம். குறுகிய காலத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால ஏற்பாடுகள் செய்யும். அதேசமயம் அது எந்தவொரு கட்சிக்கும் சாதகமாக இருக்காது.

தேர்தல் பத்திரம் வாயிலாக அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தற்போது தடை செய்ய முடியாது. ஆனால், மே 30ம் தேதிக்குள், தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை மற்றும் நன்கொடை கொடுத்தபவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் சீலியிடப்பட்ட கவரில் வைத்து சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுங்க- அனைத்து கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.... Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை