மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தேர்தல் சமயத்தில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தாவுவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அணி மாறும்போது தான் சம்பந்தபட்ட நபருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது போன்ற ஒரு சம்பவம்தான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நடந்துள்ளது.
ஸ்மிருதி இரானியின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் ரவிதத் மிஸ்ரா. உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியை சேர்ந்தவர் அந்த ரவிதத் மிஸ்ரா. ஸ்மிருதி இரானி அமேதிக்கு வரும்போது எல்லாம் ரவிதத் மிஸ்ரா வீட்டுக்கு செல்வது வழக்கம். அவ்வளவு தூரம் ஸ்மிருதி இரானியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய ரவிதத் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இது ஸ்மிருதி இரானிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக தகவல்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் அமேதி தொகுதிக்கு வந்த போது ரவிதத் மிஸ்ரா அவர்களை சந்தித்து அந்த கட்சியில் ஐக்கியமானார்.