சிக்கிய 1,381 கிலோ தங்கம் எங்களுக்கு சொந்தமானது- திருப்பதி தேவஸ்தானம் தகவல்

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 1,381 கிலோ தங்கம் தங்களுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நேற்று மாலை நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த 2 வேன்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

வேன்களை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேன்களில் மொத்தம் 1,381 கிலோ தங்க கட்டிகள், நகைகள் இருந்தது. மேலும் வேன் டிரைவர்களிடம் தங்கத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.இதனையடுத்து அந்த வேன்களை பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின் வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த தங்க கட்டிகள் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பதி தேவஸ்தானுக்கு கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 1,381 கிலோ தங்கம் எங்களுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய தங்கத்துக்கான உரிய ஆவணங்களை அளித்து தங்கத்தை திருப்பதிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்