பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி, பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாரணாசியில் குவிந்துள்ளனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மே 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி நகரமே திருவிழா போல் களைகட்டியுள்ளது. நேற்று மோடி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மோடியின் மனுத்தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் வாரணாசிக்கு படையெடுத்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்பே குடும்பத்துடன் வாரணாசி சென்று விட்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று நடந்த பேரணியில் தனது மகன் ரவீந்திரநாத் துடன் பங்கேற்றார்.
மோடி வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்னதாக இன்று காலை வாரணாசி சென்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும், பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் தமிழகத்தில் இருந்து அதிமுக தரப்பில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் அமித் ஷாவுடனான சந்திப்பில் பங்கேற்றனர்.