பிரதமர், அமித்ஷா மீது புகார்! தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

supreme court issued notice to election commission on congress petition

by எஸ். எம். கணபதி, May 1, 2019, 10:19 AM IST

பிரதமர் மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மீது 37 புகார்கள் கொடுத்தும் தேர்தல் கமிஷனில் இது வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில் வக்கீல் யாரும் ஆஜராகவில்லை. எனவே, தேர்தல் கமிஷன் கருத்தை கேட்காமல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வரும் 6ம் தேதிக்குள் பதிலளிக்க கூறி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்
பின்னர் வழக்கை 6ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இதற்கிடையில் மோடி, அமித்ஷா ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க தடை எதுவும் இல்லை என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

தேர்தல் கமிஷன் மறுப்பு: மகாராஷ்டிராவின் வார்தாவில் பிரதமர் மோடி பேசிய போது, ‘‘இந்துக்கள் அதிகமாக வசிக்கும் தொகுதியில் போட்டியிட சில தலைவர்களுக்கு பயம் உள்ளது’’ என்று ராகுலை விமர்சித்திருந்தார். அதாவது, கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவது குறித்து அப்படி பேசியிருந்தார்.

மதரீதியாக பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதி இருந்தும் மோடி அப்படி பேசியது விதிமீறல் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தது. பிரதமர் மற்றும் அமித்ஷா மீது கொடுக்கப்பட்ட புகார்களை மேஜைக்கு அடியில் போட்டு வைத்திருந்த தேர்தல் கமிஷன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட போது, பிரதமர் மீதான காங்கிரசின் இந்த ஒரு புகாரை மட்டும் விசாரித்தது. அதன்பின், பிரதமர் அப்படி பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று கூறி புகாரை நிராகரித்தது.

இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

You'r reading பிரதமர், அமித்ஷா மீது புகார்! தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை