இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
14ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டது. இது, 108 காரட் கொண்டது. இந்தியாவில் காலனி ஆட்சி நடந்தபோது, இந்த வைரம் ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது. கோஹினூர் வைரத்தை அவர்கள் லண்டன் அருங்காட்சியகத்தில் கொண்டு வைத்தனர்.
கோஹினூர் வைரத்தை ஏலம் விட இங்கிலாந்து முடிவு செய்தபோது, அதை தடுக்கக்கோரியும், இந்தியாவுக்கு மீட்டுவர உத்தரவிடக்கோரியும் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வெளிநாட்டு அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, கடந்த 2017–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அம்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் அந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இப்பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.