டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அறை விட்டது ஏன்? என்பதற்கு எந்தக் காரணமுமில்லை . ஏன் அறைந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அதற்காக இப்போது வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அப்பாவியாக தெரிவித்த அறை விட்ட இளைஞர்.
பொது இடங்களில் கன்னாபின்னாவென்று தாக்குதலுக்கு ஆளாவது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சகஜமாகி விட்டது. பொது வாழ்க்கையில் தாம் 8 முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக கெஜ்ரிவாலே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 4-ந் தேதி டெல்லி மோதி நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கெஜ்ரிவால், இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார். சிவப்பு டீ சர்ட் அணிந்திருந்த அந்த இளைஞர் விறுவிறுவென வாகனத்தில் ஏறி, கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைய, அவரை ஆம் ஆத்மி கட்சியினர் நையப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்.சுரேஷ் என்ற அந்த இளைஞர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 7-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற அந்த இளைஞர், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தவர் என்றும், அதிருப்தியில் வெளியேறியதாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். எதற்காக கெஜ்ரிவாலை அறைந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. எனக்கு கட்சியின் பின்புலமும் கிடையாது. யாருடைய தூண்டுதலிலும் இதைத் செய்யவில்லை. சம்பவத்துக்கு பின் போலீசார் என்னை விசாரணை என்ற பெயரில் எதுவும் துன்புறுத்தவில்லை என்று கூறிய சுரேஷ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்ததற்காக வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளேன் என்று அப்பாவியாக தெரிவித்துள்ளார்.