கொல்கத்தாவில் பாஜக பேரணியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில், பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதிலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மே.வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் வன்முறை வெடித்தது. திரிணாமுல் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு என வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
கொல்கத்தா விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்கு வெளியே வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், கல்லூரி வளாகத்தில் இருந்த, வங்கத்தின் புகழ் பெற்ற கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பண்டிட் சந்திர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது.இந்த வன்முறைக்கு பாஜகவும், திரிணமுல் கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருவதால் கொல்கத்தால் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் மே. வங்கத்தில் 19-ந் தேதி இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தொடரும் வன்முறை, பதற்றத்தை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக இன்று இரவுடன் முடித்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், வன்முறையை கட்டுப்படுத்தவும், ஜனநாயகத்தை காக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மே.வங்க முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பாஜக தான் வன்முறைக்கு காரணம். சட்டம், ஒழுங்குப் பிரச்னை, வன்முறை எனக் கூறும் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுமானால், தேர்தல் பிரச்சாரம் உடனடியாக முடிவுக்கு வருவதாக அறிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து, இன்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் வரை அவகாசம் கொடுப்பது என்ன நியாயம்?. பாஜகவுக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு வன்முறை, பதற்றத்திற்கு இடையே நேற்று மே.வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இன்றும் இரு பிரச்சார பொதுக் கூட்டங்களில் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.