தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு 80 சதவீதத்தை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலும், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்ற13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் இன்று நடைபெறுகிறது. இடைத்தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, அமமுக என 3 கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரியிறைத்துள்ளதால், வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி அதிக பட்சமாக அரவக்குறிச்சியில் 35% வாக்குகள் பதிவாகியுள்ளது சூலூரில் 31.55%, ஒட்டப்பிடாரத்தில் 30. 28%, திருப்பரங்குன்றத்தில் 30.02 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 இடங்களில் 32.22% வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் முதல் 4 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் பதிவான நிலையில், மொத்த வாக்குப்பதிவு 80 சதவீதத்திற்கும் மேல் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் அரவக்குறிச்சி தவிர்த்து மற்ற தொகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அரவக்குறிச்சியில் பல்வேறு திமுக - அதிமுக இடையே சலசலப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனோ, திமு கவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் செய்ய, பரஸ்பரம் இரு கட்சிகளுமே குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த இரு கட்சிகளில் இருந்தும் பெருமளவு புகார்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபாதா சாகுவும் தெரிவித்துள்ளார்.