பா.ஜ.க. எப்படி அமோக வெற்றி? எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி!

All opposition leaders shocked over the bjp projections

by எஸ். எம். கணபதி, May 23, 2019, 13:08 PM IST

சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் எப்படி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போது காங்கிரசுக்கு எதிராக மக்கள் கடும் கோபம் கொண்டிருந்தது மட்டுமல்ல, மோடி அலை வீசியது. ஆனால், இந்த முறை சில மாநிலங்களில் மோடிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தனர். ஆனால், கடந்த தேர்தலை விட மோடிக்கு பெரிய அலை வீசியது போல், தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

ஏற்கனவே அனைத்து சேனல்களும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் பா.ஜ.க. அணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டது. அப்போதே எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, தேர்தல் கமிஷனிடம் முட்டி மோதின. வாக்கு எண்ணும் போது ஒப்புகைச் சீட்டுகளை முதலில் எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் கமிஷன் அதை நிராகரித்து விட்டது.

இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி பார்க்கும் போது பா.ஜ.க.அணி 339 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 24ல் பா.ஜ.க.முன்னிலை வகி்க்கிறது. அதே போல், மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 29ல் 28ஐ பா.ஜ.க. கைப்பற்றுகிறது. சட்டீஸ்கரிலும் 11ல் 9 தொகுதிகளை பா.ஜ.க. பிடிக்கும் போல் தெரிகிறது. மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஐந்தாறு மாதங்களிலேயே மக்கள், காங்கிரசுக்கு எதிராக இப்படி வாக்களித்திருப்பார்களா என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் கொண்டுள்ளன.

அதே போல், டெல்லியில் உள்ள 7 தொகுதியிலுமே பா.ஜ.க. வெற்றிமுகத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் 80ல் 59ஐ பா.ஜ.க.வும், 22 தொகுதிகளில் பகுஜன்=சமாஜ்வாடி கூட்டணியும் கைப்பற்றும் என தெரிகிறது. உ.பி.யில் காங்கிரஸ் கட்சிசார்பில் சோனியா காந்தி மட்டுமே முன்னிலையில் உள்ளார். அமேதியில் ராகுல்காந்தியை விட ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதே போல், மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42ல் பா.ஜ.க. 17 தொகுதியிலும், திரிணாமுல் 24 தொகுதியிலும் , காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. அணி 23 தொகுதியிலும், காங்கிரஸ் அணி 20 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. பீகாரில் மொத்தம் உள்ள 40ல் பா.ஜ.க. அணி 16 தொகுதியிலும், ஆர்.ஜே.டி அணி 16 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

இப்படி பா.ஜ.க. அணி யாருமே எதி்ர்பாராத வகையில் வெற்றி பெறுவது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், ம.பி. மாநிலங்களில் அந்த கட்சிக்கு இந்த அளவுக்கு தோல்வி கிடைக்க வாய்ப்பில்லை. அதே போல், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் எல்லாவற்றிலும் அமித்ஷா சொன்னது போல் 300க்கும் அதிகமான இடங்கள் சொல்லப்பட்டன. தேர்தல் கமிஷனும் ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மீதான 22 கட்சிகளின் சந்தேகத்தை போக்க முயற்சிக்கவே இல்லை. எனவே, அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

You'r reading பா.ஜ.க. எப்படி அமோக வெற்றி? எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை