தனக்கு உடல்நிலை சரியி்ல்லாத காரணத்தால், அமைச்சர் பதவி வேண்டாம் என்று குறிப்பிட்டு அருண்ஜெட்லி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மே 30ம் தேதி பதவியேற்கிறார். கடந்த முறையை விட பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதாலும், ஏற்கனவே மோடி-அமித்ஷா கட்டுப்பாட்டில் பா.ஜ.க. இருப்பதாலும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் யார், யார் என அவர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள்.
கடந்த முறை மோடி பொறுப்பேற்றதுமே மூத்த தலைவர் அத்வானி உள்பட கட்சியில் 75 வயதை கடந்தவர்கள் ஓரங்கப்பட்டனர். இம்முறை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கே சீட் தரப்படவில்லை. சீட் கிடைக்காது என்பதை உணர்ந்ததுமே, அவர் தனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்று விலகினார். அதே போல், இப்போது மோடியும், அமித்ஷாவும் இணைந்து அமைச்சர்கள் பட்டியலை தயாரித்தனர்.
இந்நிலையில், தனக்கு பதவி கிடைக்காது என்பதை உணர்ந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், கட்சிக்கும், நிர்வாகத்திற்கும் எந்த ஒத்துழைப்பையும் தரத் தயார் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அமைச்சர் பதவி வேண்டாம் என்று கடிதம் எழுதி விட்டதுடன், அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஜெட்லி போட்டுள்ளார். எனவே, அவர் மீண்டும் அமைச்சராக வாய்ப்பில்லை.