பிரதமராக மோடி 2வது முறை பதவியேற்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமான நால்வர் அணிக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தன்னிடம் அரசு நிர்வாகம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளை வைத்து கொண்டிருக்கிறார். அமைச்சரவையில் 2வது இடமாக கருதப்படும் உள்துறை இலாகாவை அவர் அமித்ஷாவுக்கு ஒதுக்கியிருக்கிறார். 3வது துறையாக கருதப்படும் பாதுகாப்பு துறை, ராஜ்நாத்சிங்கிற்கும், 4வது துறையாக விளங்கும் நிதித் துறை நிர்மலா சீத்தாராமனுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனைகளை அளிக்கக் கூடிய முதல் நான்கு இடங்களில் இருப்பவர்கள் யார், யார் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர். எனினும், அவர் தற்போது கர்நாடக ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். அவர் பெரும்பாலும் வசிப்பது டெல்லியில் என்பதும் குறிப்பிடத்தக்கது.