பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது கட்சியைச் சேர்ந்த மேலும் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். ஆனால், பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி தர முடியும் என்று கைவிரித்து விட்டார்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க., லோக்ஜனசக்தி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 17 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 16 தொகுதிகளிலும், பஸ்வான் கட்சியான லோக்ஜனசக்தி 6 தொகுதிகளிலும் வென்றன. இதையடுத்து, மோடி அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இதற்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். ‘லோக்ஜனசக்திக்கும் ஒரு அமைச்சர், எங்களுக்கும் ஒரு அமைச்சரா?’ என்று கோபம் கொண்டதுடன், தங்களுக்கு ஒரு கேபினட், ஒரு தனிப்பொறுப்பு இணையமைச்சர், இன்னொரு இணையமைச்சர் பதவி தர வேண்டுமென்று கோரினார். இதை மோடி-அமித்ஷா ஏற்றுக் கொள்ளவி்ல்லை. இதனால், அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, பீகார் மாநில அமைச்சர்கள் 3 பேர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகி விட்டதால், அந்த இடங்கள் காலியாகின. ஏற்கனவே முசாப்பூர் விவகாரத்தில் மஞ்சு வர்மா, அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதனால், 25 அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், நிதிஷ்குமார் தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார்.
தனது கட்சியைச் சேர்ந்த சஞ்சய்ஜா, நீரஜ்குமார், சியாம் ரஜாக், பீமா பாரதி, அசோக்சவுத்ரி, நரேந்திர நாராயன் யாதவ், லட்சுமேஸ்வர் ராய், ராம்சேவக் சிங் ஆகிய 8 பேரை அமைச்சர் ஆக்கினார். ஆனால், பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவிதான் தர முடியும் என்று கூறி விட்டார். பா.ஜ.க. ஏற்கனவே 3 அமைச்சர் பதவி கேட்டுக் கொண்டிருந்தது. ஐக்கிய ஜனதா தளம் 73 எம்.எல்.ஏ.க்களையும், பா.ஜ.க. 54 எம்.எல்.ஏ.க்களையும் வைத்திருக்கின்றன. அதனால், தங்களுக்கு மேலும் மூன்று அமைச்சர் பதவியாவது தர வேண்டுமென்று பா.ஜ.க. கோரியது. ஆனால், நிதிஷ்குமார் ஒன்றுதான் தர முடியும் என்று சொல்லி விட்டதால், பா.ஜ.க.வில் யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை.
இது குறித்து துணை முதல்வரும், பா,ஜ.க. தலைவருமான சுஷில்குமார் மோடி கூறுகையில், ‘‘ஒரேயொரு அமைச்சர் பதவிதான் தர முடியும் என்று நிதிஷ் கூறியிருக்கிறார். இப்போதைய சூழலில் பா.ஜ.க. அதை நிரப்பவில்லை’’ என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே நிதிஷ்குமாருக்கும், பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. அமைச்சர் பதவி விவகாரத்தால், இந்த உரசல் அதிகமாகியிருக்கிறது. எனினும், இரு கட்சிகளுமே ஆட்சியை விட்டுவிடத் தயாராக இல்லை. அதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்கும். அந்த தேர்தலில் நிதிஷ்குமார் தனியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று இப்போதே பீகார் அரசியலில் பேச்சு எழுந்துள்ளது.