சிதம்பரத்திடம் 20 கேள்வி பதிலளிக்க மறுத்தாரா?

20 questions CBI posed to P Chidambaram accused in INX media case

by எஸ். எம். கணபதி, Aug 22, 2019, 17:20 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 20 கேள்விகள் கேட்டுள்ளனர். அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நேற்றிரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 2007ல் மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜியின் ஐ.என்.எக்ஸ். மீடியா கம்பெனிக்கு மொரிசியஸ் கம்பெனிகளில் இருந்து முறைகேடாக ரூ.305 கோடி அன்னிய முதலீடு வந்தது. அப்போது அந்த விதிமீறல்களை நிவர்த்தி செய்து, அந்த முதலீட்டுக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி) ஒப்புதல் அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், விதிகளை மீறி இ்ப்படி ஒப்புதல் அளிக்கச் செய்தார்.

இதற்காக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் கம்பெனிக்கு 10 லட்சம் டாலர் லஞ்சமாக இந்திராணியின் ஐ.என்.எக்ஸ். கம்பெனி கொடுத்தது என்பதுதான் அந்த வழக்கு.

டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சென்று அவரை கைது செய்தனர். இது பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை சிபிஐ தலைமை அலுவலகத்தில் உள்ள கெஸ்ட் ரூமில் தங்க வைத்தனர். அப்போது அவருக்கு அதிகாரிகள் உணவு கொடுத்த போது, சிதம்பரம் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இதன்பின், இன்று பகல் 12 மணி வரை சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் எந்த விசாரணையும் நடத்தவில்லை. பகல் 12 மணிக்குத்தான் அவரிடம் சி.பி.ஐ. டைரக்டர் ஆர்.கே.சுக்லா முன்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். 20 கேள்விகள் வரை அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்திராணி முகர்ஜியை எப்போது பார்த்தீர்கள், அவரை யார் அழைத்து கொண்டு வந்தது? என்பன போன்ற கேள்விகள் எழுப்பியுள்ளனர். ஆனால், சிதம்பரம் தனக்கு இந்திராணியை தெரியாது என்று கூறி, எந்த கேள்விக்கும் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Crime News

அதிகம் படித்தவை