5 டிரில்லியன் பொருளாதாரம்: நிர்மலாவை விமர்சிக்கும் சுப்பிரமணிய சாமி

Lack of boldness and knowledge in finance ministry, says subramania swamy

by எஸ். எம். கணபதி, Aug 31, 2019, 10:54 AM IST

ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய துணிவு மற்றும் அறிவு தேவை. ஆனால், இப்போது இரண்டுமே இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு எந்த பதவியும் தராவிட்டாலும், அவரை நெருங்கிய நண்பராக வைத்து கொண்டார். தன்னை அவர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று அனுமதித்தார். இதனால், சாமியும் பதிலுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, சிதம்பரம், சசிதரூர் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகளை போட்டு அவர்களை நெருக்கடியில் வைத்திருந்தார். இதனால், கடந்த 2016ம் ஆண்டில் ராஜ்யசபாவுக்கு சாமியை மீண்டும் நியமன உறுப்பினராக அனுப்பினார் பிரதமர் மோடி.

இதன்பின்னர், நிதியமைச்சர் அல்லது சட்ட அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சுப்பிரமணியசாமி எதிர்பார்த்தார். அவர் ஏற்கனவே 1990ல் சந்திரசேகர் ஆட்சியி்ல் வர்த்தக அமைச்சராக இருந்துள்ளார். ஆனால், மோடி அவரை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளவே விரும்பவில்லை. இதனால், கடந்த 2014 முதல் 2019 வரை நிதியமைச்சர் ஜெட்லியின் செயல்பாடுகளை சாமி கடுமையாக விமர்சித்தார். அவரால்தான் பல காங்கிரஸ் தலைவர்கள் காப்பாற்றப்படுவதாவும், ஜெட்லியால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.

கடந்த மே மாதம், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கும் போது தனக்கு நிதியமைச்சர் பதவி தருவார் என்று சாமி எதிர்பார்த்தார். ஆனால், எந்தப் பதவியும் தரப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் சாமியை வைத்து கொள்ளவே மோடி விரும்பவில்லை என்பது சாமிக்கு நன்றாக தெரிந்து விட்டது. அவருக்கு நிதியமைச்சர் பதவி தராதது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஏற்கனவே அதிருப்தியடைந்த சாமி, கடந்த 31ம் தேதியன்று, போட்ட பதில் ட்வீட்டில், இது போன்ற மறுப்புகளை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். நான் கீதையை நம்பி கடைபிடிப்பதால், இந்த மறுப்புகள் எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனது கடந்த கால அனுபவங்களின்படி, இந்த ஏமாற்றங்கள் பின்னாளில் இதை விட சிறந்ததை தரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பிறகும், சாமிக்கு, சிறந்தது அல்ல, சாதாவாக கூட எதுவும் கிடைக்கவில்லை. இதனால், புதிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை விமர்சித்து வருகிறார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே அவர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை சாமி கிண்டலடித்தார். இந்நிலையில், தற்போது இந்தியப் பொருளாதாரம் சரிந்து வருவதாக பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. குறிப்பாக, ஆட்டோமொபைல் தொழில் துறையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, மாருதி நிறுவனத் தலைவர் பார்கவா, தமது நிறுவனத்தில் 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியதாக வெளிப்படையாகவே அறிவித்தார்.

இதனால், பொருளாதாரத்தை ஊக்குவிக்க சில முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீத்தாராமன் கடந்த வாரம் அறிவித்தார். பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார். தொடர்ந்து, பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் 4 பெரிய வங்கிகளுடன் 6 சிறிய வங்கிகளை இணைக்கும் முடிவை நேற்று அறிவித்தார். அத்துடன், மோடியின் லட்சியமான 5 டிரி்ல்லியன் பொருளாதாரத்தை இந்தியா எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் நிர்மலா சீத்தாராமனை மறைமுகமாக கிண்டலடித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
புதிய பொருளாதாரக் கொள்கை எதுவும் வராத நிலையில், 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்கத் தயாராக இருங்கள். துணிவு அல்லது பொருளாதாரம் என்பதில் ஏதாவது ஒன்று மட்டுமே இருந்தால் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டு விட முடியாது.

இரண்டுமே தேவை. ஆனால், இன்று இரண்டுமே இல்லை
இவ்வாறு சாமி குறிப்பிட்டிருக்கிறார். மோடியின் ஆட்சியில் தெளிவான பொருளாதாரக் கொள்கை இல்லை என்று கூறி வரும் எதிர்க்கட்சியினருக்கு மெல்லுவதற்கு அவல் கொடுத்துள்ளார் சுப்பிரமணிய சாமி. அமித்ஷா ரியாக்ஷன் எப்போது வெளிப்படுமோ?

அடப்பாவமே... சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யமா ? பியூஸ் மனுஷ்க்கும், பியூஸ் கோயலுக்கும் வித்தியாசம் தெரியலையா?

You'r reading 5 டிரில்லியன் பொருளாதாரம்: நிர்மலாவை விமர்சிக்கும் சுப்பிரமணிய சாமி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை