கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை.
கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் டி.கே.சிவக்குமாரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. அப்போது ஏராளமான சொத்துக்கள் முடக்கப்பட்டு, பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா மோசடி, சட்ட விரோத பண பரிமாற்றம் என வழக்குகளும் பாய்ந்தன. இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகாமல் இருக்க, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் தடை பெற்றிருந்தார்.நேற்று முன்தினம் இந்த தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமாகியது. டி.கே.சிவக்குமாருக்கு நேற்று முன்தினம் இரவே மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் மறுநாள் (நேற்று) பகல் ஒரு மணிக்குள் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது.
ஆனால் உடனடியாக டெல்லி செல்லாமல், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் அவசர மனு செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததால், பிற்பகலில் சிவக்குமார் டெல்லி புறப்பட்டார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு ஆஜரான சிவக்குமாரிடம் 5 மணி நேரமாக நள்ளிரவு வரை விசாரணை நீடித்தது. மீண்டும் இன்று ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் கொடுத்தது.
அதன்படி இன்றும் டி.கே.சிவக்குமார் விசாரணைக்காக ஆஜரானார். இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார்,
நான் யாருடைய பணத்தையும் அபகரிக்கவில்லை. எந்தக் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றம் எதுவும் செய்து விடவில்லை. கைப்பற்றப்பட்ட பணம் முழுவதும் என்னுடைய சொந்தப் பணம். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு ஏன் போட்டார்கள் என்றே தெரியவில்லை. இதன் பின்னணியில் பெரிய சதி உள்ளது, சட்டத்தை மதிப்பவன் நான். அதனால் இதனை சட்டரீதியாக சந்திப்பேன் என்று கூறினார்.