உலகிற்கு இந்தியாவை அடையாளப்படுத்த, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இன்று இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழி தேவை என்பதும் முக்கியமானது.
இந்தியாவை இணைக்கக் கூடிய ஒரு மொழி இருக்கிறது என்றால், அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தியாக மட்டுமே இருக்கும். ஒரே மொழியாக இந்தி இருந்தால்தான்் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும்.
எனவே, மக்கள் தங்கள் தாய்மொழியை அதிகமாக பயன்படுத்தும் அதே நேரத்தில் இந்தி மொழியை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், நாம் மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நிறைவேற்ற முடியும். மகிழ்ச்சிகரமான இந்தி நாள்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கு ஆங்கிலேயர் காலம் முதலே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. காரணம், இதன் மூலம் நாளாவட்டத்தில் தாய்மொழியான தமிழ் அழிந்து விடும் என்ற பயம்தான் காரணம். தமிழகத்தில் இப்போது ஏராளமான மாணவர்கள் சிறுவயதிலேயே இந்தி படித்தாலும், யாரும் இந்தியில் பேசுவதே இல்லை. ஆந்திராவில் கூட அம்மாநில தெலுங்கு மக்களில் பலர் இந்தி பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.