உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவை இணைக்கக் கூடிய ஒரு மொழி இருக்கிறது என்றால், அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தியாக மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் என்ற இஸ்லாமியக் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். அவரது பதிவில், எல்லா இந்தியரின் தாய் மொழியும் இந்தி அல்ல. இந்த நாட்டின் பல்வேறு மொழிகளின் அழகையும், வேற்றுமையையும் பாராட்ட முயற்சிப்பீர்களா? வெவ்வேறு மொழி, பேச்சு, கலாச்சாரத்தை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல் சட்டப்பிரிவு 29ல் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தி, இந்து, இந்துத்துவாவை விட மிகப் பெரியது இந்தியா என்று கூறியுள்ளார்.