நில மாற்ற முறைகேடு வழக்கில் சித்தராமையா, குமாரசாமிக்கு சம்மன்.. ஐகோர்ட்டில் மனு தாக்கல்..

siddaramaiah, kumarasamy moved high court againt summons in land cases

by எஸ். எம். கணபதி, Sep 21, 2019, 14:49 PM IST

விவசாய நிலங்களை கட்டுமான நிலமாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததில் முறைகேடு செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் திடீரென அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறி ராஜினாமா செய்தனர். இதைடுத்து, ஆட்சி கவிழ்ந்தது. எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.

குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க விடாமல் பாஜகவுக்கு எதிராக ஓராண்டாக கடுமையாக போராடியவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமார். தற்போது அவர் ரூ.200 கோடி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், சித்தராமையா முதல்வராக இருந்த போது பாப்பன்னா என்பவருக்கு சொந்தமான முக்கால் ஏக்கர் விவசாய நிலத்தை கட்டுமான நிலமாக மாற்றிக் கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில், மைசூரு நகர மேம்பாட்டு அமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் கங்காராஜு என்பவர் கடந்த ஆண்டு புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில் லட்சுமிபுரம் போலீஸார், ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர்.

அதன்பிறகு, அந்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று கூறினர்.
ஆனால், அதை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த வழக்கில் சித்தராமையாவுக்கு வரும் 26ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா ஒரு ரிட்மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இதே போல், முன்னாள் முதல்வர் குமாரசாமி மீதும் இதே நில மாற்ற முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கலோகேவடாஹள்ளி என்ற பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை மாற்றிக் கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அக்டேபர் 4ம் தேதி ஆஜராகுமாறு குமாரசாமிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அவரும் சம்மனை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

You'r reading நில மாற்ற முறைகேடு வழக்கில் சித்தராமையா, குமாரசாமிக்கு சம்மன்.. ஐகோர்ட்டில் மனு தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil

More Bangalore News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை