ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆந்திர அரசின் புதிய திட்டம்.. ஆட்டோக்காரனாக மாறிய ஜெகன்..

AP CM Jagan launches YSR Vahana Mitra welfare scheme for auto and cab driver-owners

by எஸ். எம். கணபதி, Oct 5, 2019, 12:44 PM IST

ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார்.

ஆந்திராவில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஜெகன்மோகன் ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதன்படி, சொந்தமாக ஆட்டோ, டாக்சி, மேக்ஸிகேப் போன்றவை வைத்து தாங்களே ஓட்டும் டிரைவர்களுக்கு உதவும் வகையில், ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற புதிய திட்டத்தை ஜெகன்மோகன் தொடங்கியுள்ளார். அதாவது, சொந்த வண்டி வைத்து ஓட்டினாலும் தினமும் கிடைக்கும் சில நூறு ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதே சிரமம்.

இந்த நிலைமையில், வாகன பராமரிப்பு, தகுதிச்சான்று, பெர்மிட் போன்றவைக்காக பணம் திரட்ட முடியாமல் தவிப்பார்கள். எனவே, அவர்களுக்கு அதற்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்தான் ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டம்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம் எலூருவில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆட்டோ டிரைவர்களின் சீருடையான காக்கிச் சட்டையை தானும் அணிந்து கொண்டு, காசோலைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தில் நிதியுதவி கேட்டு மொத்தம் ஒரு லட்சத்து 73,352 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 73,102 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனங்களை தங்கள் மனைவி, மகன் பெயரில் வாங்கியிருக்கும் டிரைவர்களுக்கும் இந்த நிதியுதவி தரப்படும் என்றும் தெரிவித்தனர்.

You'r reading ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆந்திர அரசின் புதிய திட்டம்.. ஆட்டோக்காரனாக மாறிய ஜெகன்.. Originally posted on The Subeditor Tamil

More Andhra pradesh News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை