டெல்லியில் பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஹசீனா சந்திப்பு..

by எஸ். எம். கணபதி, Oct 5, 2019, 12:51 PM IST

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வங்கதேசத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், வங்கதேசத்திற்கு வெங்காயம் ஏற்றுமதியை இந்திய அரசு திடீரென தடை செய்ததற்கு கவலை தெரிவித்தார். இது போன்ற விஷயங்களில் முன்கூட்டியே தகவல் அளிப்பது தங்கள் நாட்டுக்கு உதவும் என்று கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று காலை ஷேக்ஹசீனா, பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இருநாட்டு தொழில் வர்த்தக உறவுகள், கலாசார உறவுகள் குறித்தும், தீவிரவாதச் செயல்களை தடுப்பது குறித்தும் விவாதித்தனர். மேலும், இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.


Leave a reply