விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் தீவிரமானது.. எல்லைகளில் போலீஸ் குவிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 27, 2020, 10:12 AM IST

டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது ரயில் மறியலை கைவிட்டு, டெல்லியை நோக்கி பேரணி(டெல்லி சலோ) என்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் திரண்டு நேற்று முதல் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், டெல்லிக்கு வரும் சாலைகளில் அனைத்து எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. ஹரியானா பஞ்சாப் எல்லையான சம்போ பகுதியில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். போலீசார் வஜ்ரா வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இந்நிலையில், இன்றும் குருகிராமம், ரோஹ்டாக்- ஜஜ்ஜார், கர்னால் ஏரி பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹரியானா மாநில அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் ஏராளமான வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதால், அந்த சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லிக்கும், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், நாங்கள் டெல்லியில் ஒரு மாதம் கூட தங்கி போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம். அதற்காக உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். குருத்வாராக்களில் இருந்து எங்களுக்கு உணவு வருகிறது என்றார். டெல்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சவா இன்று காலையில் டெல்லி எல்லைப் பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் கோவிட்19 பரவல் காரணமாக போரட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

You'r reading விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் தீவிரமானது.. எல்லைகளில் போலீஸ் குவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை