வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. டொனால்டு டிரம்ப் பேட்டி.. தேர்தலில் மோசடி என மீண்டும் புகார்..

by எஸ். எம். கணபதி, Nov 27, 2020, 09:55 AM IST

ஜோ பிடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். ஆனாலும், தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாக மீண்டும் குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வந்தது. கொரோனா அச்சம் காரணமாக பல லட்சம் மக்கள் மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது.
அதே சமயம், மொத்தம் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் மெஜாரிட்டிக்கு 270 ஓட்டுகளை பெற வேண்டும்.

ஆனால், நான்கைந்து நாளில் ஜோ பைடன் 290 எலக்டோரல் ஓட்டுகளை பெற்று விட்டார். ஆனால், டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தானே வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, வழக்கு தொடர்ந்தனர். அவற்றிலும் டிரம்ப்புக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. அதே போல், பென்சில்வேனியா, ஜார்ஜியா என அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஜோ பிடன் முன்னிலை பெற்றார். புதிய அதிபர் ஜோ பைடன், அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.இந்நிலையில், தோல்விக்கு பிறகு டிரம்ப் முதல் முறையாக நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா? என்று கேட்டார்.

அதற்கு அவர், நிச்சயமாக.. ஜோ பிடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக எலக்டோரல் காலேஜ் அறிவித்ததும் அது நடக்கும். நீங்களும் அதை அறிவீர்கள். ஆனால், இப்போது முதல் ஜன.20க்குள் நிறைய விஷயங்கள் நடக்கவுள்ளன என்று பதிலளித்தார். தொடர்ந்து அவர் தேர்தலில் மோசடி என்று மீண்டும் குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது: தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. மூன்றாம் நிலை நாடு போல் அமெரிக்கா செயல்பட்டுள்ளது. நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறோம். ஆனால், அதை ஹேக் செய்ய முடியும். தேர்தலில் ஜோ பிடன் வென்றதாக அறிவிக்கப்பட்டால் அது பெரிய தவறு. தேர்தலில் மிக அதிகபட்ச அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளன. இவ்வாறு டிரம்ப் கூறினார். ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு, இந்த கேள்விக்கு விடை தெரியும். ஆனால், அதை இப்போது சொல்ல மாட்டேன் என்றார்.

You'r reading வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. டொனால்டு டிரம்ப் பேட்டி.. தேர்தலில் மோசடி என மீண்டும் புகார்.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை