சோனியா மீது எப் ஐ ஆர் போடச் சொல்லுவதா? காங்கிரஸ் வழக்கறிஞர் கொதிப்பு

by எஸ். எம். கணபதி, Feb 29, 2020, 12:04 PM IST

சோனியா மீது எப்ஐஆர் போடச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கு பொது நலன் வழக்கல்ல, இது விசாரணைக்கு ஏற்றதே அல்ல என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி ஆவேசமாகக் கூறினார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் கடந்த வாரம் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய டெல்லி ஐகோர்ட் நீதிபதி எஸ்.முரளிதர் உத்தரவிட்டார். இதையடுத்து, பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் சிலர், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, டெல்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியா, உள்ளிட்டோர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குறிப்பிட்டு, அவர்கள் மீது எப்ஐஆர் போட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இது குறித்து, மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி நேற்று(பிப்.28) கூறியதாவது:
இது பொது நலன் வழக்கல்ல. அரசியல் நலன் வழக்கு. எந்த வழக்குப் பதிவானாலும் அப்படியே நோட்டீஸ் அனுப்பி விட முடியாது. அதிலும் பொது நலன் வழக்கு என்றால் அதில் அடிப்படை இருக்கிறதா என்று ஆய்வு செய்துதான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சோனியா மீது எப்ஐஆர் போடச் சொல்லி வழக்கு தொடர்ந்திருப்பவர், மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ்சவுகான் ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக இருந்த பாஜக வழக்கறிஞர். அவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல. இந்த வழக்கில் நாங்கள் சரியான பதிடி கொடுப்போம்.

பாஜக அரசு உலகம் முழுவதும் யார் மீதும் எப்ஐஆர் போடுவார்கள். ஆனால், உண்மையிலேயே வெறுப்பூட்டும் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக பிரமுகர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் போன்றவர்கள் மீது என்ன ஆதாரங்கள் இருந்தாலும், எத்தனை மாதங்கள் ஆனாலும் எப்ஐஆர் போடவே மாட்டார்கள்.
இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

You'r reading சோனியா மீது எப் ஐ ஆர் போடச் சொல்லுவதா? காங்கிரஸ் வழக்கறிஞர் கொதிப்பு Originally posted on The Subeditor Tamil

More Delhi News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை