டெல்லியில் தடையை மீறி தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், பெரும் புகைமூட்டம் காணப்படுகிறது. எதுவும் கண்ணுக்கு தெரியாததால், சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
நாட்டிலேயே டெல்லியில்தான் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டு வந்தது. இதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது. எனினும், காற்று மாசு அளவு குறைந்தபாடில்லை. தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால், மாசு அதிகரிக்கும் என்பதால் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் மாநில அரசு தடை விதித்தது. டெல்லி முதல் ஹரியானா வரையான என்.சி.ஆர். பகுதியில் வெடிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயமும் தடை விதித்திருந்தது.
ஆனாலும், டெல்லி மக்கள் நேற்று(நவ.14) தீபாவளியை பட்டாசு வெடித்தே கொண்டாடினர். பல பகுதிகளிலும் அதிகமான பட்டாசுகளை வெடித்ததால், காற்று மாசு அளவு அதிகரித்தது. நேற்று மாலை 3 மணியளவில் காற்று மாசு புள்ளி 405 என்ற அளவுக்கு சென்றது. இதையடுத்து, அப்பகுதிகளை மோசமான மண்டலம்(severe zone) என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதன்பின்பும், காற்று மாசு அலகு 423, 460, 500 என்று அதிகரித்தது.
இதன் காரணமாக, டெல்லி முழுவதும் பெரும் புகைமூட்டமாக காணப்பட்டது. சாலைகளில் எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை. அதனால், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மலைப்பிரதேசத்தில் பயன்படுத்தும் மஞ்சள் நிற விளக்குகளை போட்டு அந்த வெளிச்சத்தில் சென்றன, இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர். இன்று காலையில் புகைமூட்டம் குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக மாசு கட்டுப்படவில்லை.