டெல்லியில் கலவரம் நடந்த பகுதியில் மக்களைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் குழு..

by எஸ். எம். கணபதி, Feb 29, 2020, 12:10 PM IST

கலவரப் பகுதியில் மக்களைச் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து அறியக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் கடந்த 23ம் தேதி ஞாயிறன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. இதையடுத்து, பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா, அந்த போராட்டங்களை போலீசார் கலைக்க வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் அவர்களை விரட்டுவோம் என்று மிரட்டல் விடுத்தார். இதன்பின், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக சிஏஏ ஆதரவு போராட்டத்தைத் தொடங்கினார். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இது கலவரமாக மாறி, மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலாம்பூர் போன்ற பகுதிகளில் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த வாரம் நடைபெற்ற இந்த கலவரங்களில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். தற்போது டெல்லியில் சகஜநிலை திரும்பியுள்ளது.

இந்நிலையில், கலவரம் பாதித்த பகுதியில் மக்களைச் சந்தித்து, நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிந்து கொள்வதற்காகக் காங்கிரஸ் தரப்பில் ஒரு குழுவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். அதில், கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லி காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதி சக்திசிங் கோகில், அரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, தாரிக் அன்வர் எம்பி, மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் கலவரம் நடந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விசாரித்து அது தொடர்பாக ஒரு அறிக்கையைக் கட்சித் தலைவர் சோனியாவிடம் அளிக்கவுள்ளனர்.

You'r reading டெல்லியில் கலவரம் நடந்த பகுதியில் மக்களைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் குழு.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை