கேரளாவில் வெடிபொருளை கடித்ததால் மேலும் ஒரு யானை பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அன்னாசி, பலாப்பழம் போன்ற பழங்களில் வெடிபொருளை நிரப்பி வனப்பகுதியில் ஆங்காங்கே வைத்து விடுவார்கள். இதை பழம் என நினைத்து விலங்குகள் சாப்பிடும் போது வாய்க்குள் வைத்து வெடி வெடிக்கும். இதில் பெரும்பாலான விலங்குகள் அந்த இடத்திலேயே இறந்துவிடும். இந்த டெக்னிக்கை பயன்படுத்தித் தான் இந்த கும்பல்கள் வன விலங்குகளை வேட்டையாடி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் வனத்தை ஒட்டி விவசாயம் செய்பவர்களும் வனவிலங்குகள் தங்களது பயிர்களை நாசம் செய்யாமல் இருப்பதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது உண்டு. கேரளாவில் அடிக்கடி இதே போல சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் வனத்துறையோ, அரசோ இதுவரை முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் இதேபோல வாயில் பலத்த காயத்துடன் ஒரு யானை திரிந்து கொண்டிருந்தது. இது குறித்து அறிந்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வாயில் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாமலும், காயத்தில் ஈக்கள் மொய்க்காமல் இருப்பதற்காகவும் அந்த யானை அங்குள்ள ஆற்றில் இறங்கி தும்பிக்கையை தண்ணீருக்குள் தாழ்த்தி நின்று கொண்டிருந்தது.
வனத்துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் அந்த யானையை ஆற்றில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து ஒரு கும்கி யானையை வரவழைத்து அந்த யானையை கயிறு கட்டி இழுத்து வெளியே கொண்டு வந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த யானை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறை நடத்திய விசாரணையில் அந்த யானைக்கு யாரோ அன்னாசிப்பழத்தில் வெடிபொருளை நிரப்பி கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அந்த யானையை பிரேத பரிசோதனை செய்த போது அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற இந்த சம்பவத்திற்கு தேசிய அளவில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதே போன்று மேலும் ஒரு யானை இறந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள அட்டப்பாடி பகுதியில் தான் வாயில் காயத்துடன் ஒரு யானையை அப்பகுதியினர் பார்த்தனர். வேதனை பொறுக்க முடியாமல் இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை சேதப்படுத்தியது. நாளுக்கு நாள் அந்த யானையின் அட்டகாசம் அதிகரித்ததால் வனத்துறையினர் அதை பிடிக்க முயன்ற போதுதான் அந்த யானையின் வாயில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அட்டப்பாடி பகுதியில் இந்த யானை இறந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வாயில் ஏற்பட்ட காயத்தால் அந்த யானையால் பல நாட்களாக உணவு சாப்பிட முடியவில்லை. இதனால்தான் அந்த யானை இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.