மூன்றே நாளில் கழட்டப்பட்ட தாலி.. உடந்தையாக போலீஸ்!.. பறிபோன கோவை இளைஞர் உயிர்

by Sasitharan, Sep 10, 2020, 19:28 PM IST

கோவையை அடுத்த சென்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்தப் பகுதியில் சொந்தமாக இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளா தேவி என்பவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில், கடந்த 4ம் தேதி சுண்டக்காமுத்தூர் கருப்ப ராயன் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

திருமணத்துக்குப் பின் இருவரும் கோவிந்தராஜ் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இவர்களின் திருமணம் தொடர்பாகப் பெண்ணின் பெற்றோர் போலீஸிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி, கடந்த 7 ஆம் தேதி போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் இவர்கள் இருவரையும் சொத்து தொடர்பாகப் பேச வேண்டும் என்று கூறி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அதை நம்பி தம்பதிகள் இருவரும் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு மஞ்சுளா தேவியை மட்டும் தனியாக அழைத்துப் பேசிய போலீஸார், சில மணி நேரங்களில் அவரை அவரின் பெற்றோருடன் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கோவிந்தராஜ் தன் மனைவிக்கு வாங்கி கொடுத்த நகைகள் மற்றும் தாலி போன்றவற்றைத் திரும்பி கோவிந்தராஜிடம் கொடுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த கோவிந்தராஜ் காதல் மனைவியைப் பிரிந்த வருத்தத்திலிருந்துள்ளார்.இதற்கிடையே, நேற்று கோவிந்தராஜ் தனது வீட்டின் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் வெளியில் தெரியவர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் கோவிந்தராஜின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காதல் தம்பதியைப் பிரித்து வைக்க போத்தனூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டி, தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.திருமணம் ஆன மூன்று நாளிலேயே காதல் தம்பதியைப் பெண் வீட்டார் பிரித்ததால், காதலன் தற்கொலை செய்து கொண்டது கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


More Crime News

அதிகம் படித்தவை