ஹாத்ராஸ் நகருக்கு செல்ல முயன்ற திரிணாமுல் கட்சியினரை உ.பி. போலீசார் தடுத்து கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் நகரில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று சென்றனர். ஆனால், அந்த ஊருக்குள் அவர்களை நுழைய விடாமல் எல்லையிலேயே அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன்பின், அவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான டெரிக் ஓ பிரையன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் குழு இன்று ஹாத்ராஸ் நகருக்கு சென்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கவே அவர்களும் சென்றனர். அவர்களையும் உ.பி. போலீசார், அந்த நகரின் எல்லையில் தடுத்தனர். அப்போது எம்.பி.க்கள் டெரிக் பிரையன், பிரதிமா மோண்டல் ஆகியோரை போலீசார் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. பெண் எம்.பி.யான பிரதிமாவை ஆண் போலீசார் பிடித்து இழுத்து அத்துமீறி நடந்தனர் என்று அக்கட்சியைச் சேர்ந்த மமதா தாக்குர் தெரிவித்தார்.
திரிணாமுல் கட்சியினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர், அவர்களை டெல்லிக்கு அனுப்பினர்.