அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் வரும் 6ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. அதன்பின், ஓ.பி.எஸ். தர்மயுத்தம் 2.0 நடைபெறுமா?
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில், கடந்த செப்.28ம் தேதி கட்சியின் செயற்குழு கூடியது. சுமார் 280 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வந்த போது, வருங்கால முதல்வர் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். அடுத்து முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்த போது அவரது ஆதரவாளர்கள், சாமான்யர்களின் முதல்வரே என்று கோஷமிட்டனர்.
கூட்டத்தில், அதிமுகவின் சார்பில் முதல்வர் வேட்பாளராக தன்னையே அறிவிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து பேசினார். இருதரப்பிலும் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், அக்.7ம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று நிருபர்களிடம் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே கட்சியில் தனக்கு எந்த செல்வாக்கு இல்லாத நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க ஒப்புதல் அளித்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்று ஓ.பி.எஸ். நினைக்கிறார். அதனால், தேர்தலில் கூட்டணி, சீட் கொடுப்பது உள்ளிட்டவற்றை முடிவு செய்ய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். பிடிவாதமாக உள்ளார். இப்படி செய்வதன் மூலம், கட்சியில் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க விடாமல் பலமிழக்கச் செய்யலாம் என்று ஓ.பி.எஸ். கருதுகிறார்.
இந்த சூழலில், வரும் 6ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். இந்த கூட்டத்தில், முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க மெஜாரிட்டி ஆதரவு உள்ளதை வெளிப்படுத்த வேண்டுமென எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். ஆனால், எடப்பாடியின் முழு ஆதிக்கத்தில் கட்சி போய் விடாமல் தடுப்பதற்காக ஓ.பி.எஸ்சும் தனியாக ஆலோசித்து வருகிறார். அனேகமாக, அக்.7ம் தேதி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தால், ஓ.பி.எஸ். அதற்கு பதிலடி கொடுப்பார். மாவட்டவாரியாகச் சென்று, தொண்டர்களிடம் கருத்து கேட்கச் செல்வார் என்றும் அதன் மூலம் மீண்டும் தர்மயுத்தத்தை ஆரம்பிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது.