நிறுத்தாமல் அழுது கொண்டிருந்த 4 வயது மகளைத் தந்தை கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா (28). இவருக்கு மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், அடுத்ததாக 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள கோடா காலணியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.வாசுதேவ குப்தா ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். வாசுதேவ குப்தாவின் மனைவி நொய்டாவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் இவர்களிடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வாசுதேவ குப்தாவின் மனைவி, 3 வயது மகனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்குச் சென்றார் என்று வாசுதேவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் 20 நாட்களுக்கு மேலாகத் தனது 4 வயது மகளுடன் வாசுதேவ் தவித்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு அவரது மகள் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் மகளின் அழுகையை வாசுதேவால் நிறுத்த முடியவில்லை. ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற கோபம் இருந்ததால் ஆத்திரமடைந்த வாசுதேவ், மகளின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது.பின்னர் குழந்தையின் உடலை ஒரு துணியில் சுற்றி ஆட்டோவில் வைத்து வெளியே சென்றார். தன்னுடைய மனைவி பணிபுரியும் அழகு நிலையம் உள்ள பகுதிக்குச் சென்று மனைவியை நீண்ட நேரமாகத் தேடிப் பார்த்தார்.
மனைவியைக் கண்டுபிடித்து அவரிடம் மகளின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்பது தான் வாசுதேவின் திட்டமாக இருந்தது. இந்த சமயத்தில் வாசுதேவின் தம்பி ரவி என்பவர் அவருக்கு போன் செய்தார். அப்போது, தான் மகளைக் கொலை செய்து விட்டதாகக் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரவி, உடனடியாக போலீசிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று வாசுதேவை கைது செய்து சிறுமியின் உடலை மீட்டனர்.