பீகாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற காவல்துறை அதிகாரி மீது டீ கடை பெண் உரிமையாளர் தேநீர் ஊற்றியது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகிலுள்ள மற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் அகற்றி வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு பகுதியில் சட்டவிரோத தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகள் வைத்துள்ளதாக ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக தலைவர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அப்பகுதியில் சட்டவிரோதமாக தேநீர் கடை வைத்திருந்த சரிதா தேவி என்ற பெண்ணிடம் போலீஸ் அதிகாரி சுமன் ஜா விசாரணையில் ஈடுபட்டார்.
இதனால், கோபமடைந்த சரிதா தேவி போலீஸ் அதிகாரி சுமன் ஜா முகத்தில் கொதிக்கும் தேநீரை ஊற்றினார். இதனை சற்று எதிர்பாராத, சக காவல்துறையினர் சமன் ஜாவை உடனடியாக சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, உயர்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, சரிதா கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள சரிதாவின் கூட்டாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.