பாஜகவை எப்படி தோற்கடிப்பது.. பலித்தது உத்தவ் தாக்கரே வியூகம்..

by எஸ். எம். கணபதி, Jan 23, 2021, 15:46 PM IST

மகாராஷ்டிராவில் ஒரு அவியல் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்த கூட்டணியை மீண்டும் வெற்றி கூட்டணியாக மாற்றியிருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசுக்கு போட்டியாக சிவசேனா கட்சி இருந்து வந்தது. அதன்பின், சிவசேனா கட்சி பாஜகவுடன் சுமார் 35 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தேர்தலுக்கு முன்பு, முதல்வர் பதவியை கட்சிக்கு இரண்டரை ஆண்டுகளாக பிரித்து கொள்வது என ரகசியமாக ஒப்பந்தம் செய்திருந்தனர். தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை பாஜக விட்டுத் தர முடியாது என்றது. இதனால் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. இதையடுத்து, அஜித்பவாரை தன் பக்கம் இழுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) உடைத்து மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயன்றது. அந்த முயற்சி தோற்றுப் போனது. பின்னர், காங்கிரஸ்-என்சிபி கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். இது பொருந்தா கூட்டணி என்றும் 2 மாதங்களில் கவிழ்ந்து விடும் என்றும் பாஜக கூறி வந்தது. சிவசேனாவுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்தியாவில் இதற்கு முன்னெப்போதும் ஏற்றபட்டிருக்காத ஒரு கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி கடந்த நவம்பருடன் ஓராண்டு முடித்துள்ளார் உத்தவ் தாக்கரே. இதற்கிடையே, மகாராஷ்டிராவில் கடந்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 29,700 ஊராட்சிகளில் முதல் கட்டமாக 14,234 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக அதிகபட்சமாக சுமார் 3300 ஊராட்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்து சிவசேனா சுமார் 3000 இடங்களையும், என்.சி.பி. சுமார் 2800 இடங்களையும், காங்கிரஸ் சுமார் 2200 ஊராட்சிகளையும் பிடித்துள்ளன. அதாவது, தேர்தல் நடந்த ஊராட்சிகளில் 25 சதவீத இடங்களில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. அதன் மூலம், சிவசேனா கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது.

இதன்காரணமாக, மகாராஷ்டிராவில் அடுத்து வரும் தேர்தல்களில் ஏதாவது ஒரு கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், கொள்கை ரீதியாக சிவசேனா மட்டுமே அந்தக் கட்சியுடன் இணைந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிவசேனாவோ இப்போது தாங்களே மாநிலத்தில் மிகப் பெரிய கட்சி என்பதை நிலை நிறுத்தி வருகிறது. எனவே, பாஜகவை எப்படி வீழ்த்துவது என்பதை எதிர்க்கட்சிகள் உத்தவ் தாக்கரேவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலும் முதல் முறை தேர்தலில் போட்டியிட்டு, நேரடியாக முதல்வராகி, எதிரெதிர் கொள்கையுடைய கட்சிகளை ஒருங்கிணைத்து, ஓராண்டுக்கு மேல் ஆட்சி நடத்தியும் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜகவை எப்படி தோற்கடிப்பது.. பலித்தது உத்தவ் தாக்கரே வியூகம்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை