சிறுத்தையை பொறிவைத்து பிடித்து அதைக் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ளது மாங்குளம் மலை கிராமம். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமமாகும். எனவே அடிக்கடி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, காட்டுப்பன்றி உள்பட வன விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். இவ்வாறு ஊருக்குள் வரும் அரிய வன விலங்குகளை அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் ரகசியமாக வேட்டையாடி வந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் ஒரு சிறுத்தையை பொறிவைத்து பிடித்து கொன்றதாக மாங்குளம் வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாங்குளம் வனச்சரக அதிகாரி உதயசூரியன் என்பவரின் தலைமையில் வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அங்குள்ள முனிப்பாறை என்ற பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் சிறுத்தையை பிடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் முனிப்பாறை பகுதியைச் சேர்ந்த வினோத், குரியாக்கோஸ், பினு, சாலிம் குஞ்சப்பன் மற்றும் வின்சன்ட் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுத்தையை எப்படி பொறிவைத்துப் பிடித்து கொன்றனர் என தெரியவந்தது. இக் கும்பலை சேர்ந்த வினோத்துக்கு அப்பகுதியில் சொந்தமாக ஒரு விவசாய நிலம் உள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவது உண்டு. இதையடுத்து அந்த பகுதியில் இக்கும்பல் வன விலங்குகளை பிடிப்பதற்காக ஒரு பொறியை வைத்துள்ளனர்.
அந்தப் பொறியில் கடந்த சில தினங்களுக்கு முன் 6 வயதான ஒரு சிறுத்தை சிக்கியது. இதையடுத்து அந்த சிறுத்தையை அடித்துக் கொன்ற 5 பேரும் பின்னர் அதை வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் புலியின் நகம், தோல் மற்றும் பல் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக தயாராக வைத்திருந்தனர். இது தொடர்பாக பலரிடம் அவர்கள் விலை பேசியும் வந்தனர். ஆனால் அதற்குள் வனத்துறையினரிடம் இந்த 5 பேரும் சிக்கிக் கொண்டனர். இவர்கள் இதற்கு முன்பும் காட்டுப்பன்றிகள் உட்பட ஏராளமான வன விலங்குகளை வேட்டையாடி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வனத்துறையினர் புலியின் தோல், நகம் மற்றும் பல் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து 5 பேரும் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுத்தைக்கு 50 கிலோ எடை இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.