புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்தை பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் காங்கிரஸ் நீக்கியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த என்.ரங்கசாமி தனியாக பிரிந்து சென்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்து கடந்த 2011ல் ஆட்சியை கைப்பற்றினார். கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமியை தோற்கடிக்க அவரது நெருங்கிய உறவினரான ஆ.நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ்-திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தேர்தலுக்குப் பின்னா் காங்கிரஸ் மேலிடம் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சர் ஆக்கியது.
வெற்றி பெற்றால் முதலமைச்சர் என்று எதிர்பார்த்து பணியாற்றிய நமச்சிவாயம் அதிர்ச்சியடைந்தார். அவர் கட்சியை உடைத்து எம்.எல்.ஏ.க்களை தன்னுடன் அழைத்து செல்வார் என்று பேசப்பட்டது. அப்போது, காங்கிரஸ் மேலிடம் அவரை சமாதானப்படுத்தி, அமைச்சரவையில் நமச்சிவாயத்திற்கு 2வது இடத்தை கொடுத்தது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் அளித்தது. பொதுப் பணித்துறை, மதுபானங்களை கவனிக்கும் கலால் உள்பட 19 துறைகள் நமச்சிவாயத்திடம் இருந்தது. அதனால் அவரும் சமாதானமாகி பதவியை அனுபவித்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நமச்சிவாயம் மீண்டும் அதிருப்தியாளராக மாறினார். அவரிடம் பாஜக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவாக கூறப்பட்டது.
இதற்கிடையே, நமச்சிவாயத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டு, ஏ.வி.சுப்பிரமணியம் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நமச்சிவாயம் விரைவில் புதுச்சேரிக்கு வரவுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் சேரப் போவதாக கூறப்பட்டது. இந்த தகவல் உறுதியானதும் இன்று(ஜன.25) அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதன் பிறகு, நமச்சிவாயம் தனது வில்லியனூர் தொகுதியில் ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி விட்டு, சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.