சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்தாலும், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். தண்டனைக்காலம் முடிந்து அவர் வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். இதற்கிடையே, அவருக்கு கடந்த 20ம் தேதி மாலையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் லேடி கர்சான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை மற்றும் சளி, காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
அதன்பின், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்ததில் கொரோனா தொற்று பாதிப்புள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து, அவர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதாலும், சுவாசிக்கத் திணறுவதாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று(ஜன.25) காலை 9 மணிக்கு டாக்டர் ரமேஷ் கண்ணா, பெங்களூரு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் ஒரு மருத்துவ அறிக்கை வெளியிட்டனர். அதில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்து எளிதாக சுவாசிப்பதாக கூறியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அதாவது, நேற்று காலையில் அவருக்கு சர்க்கரை அளவு 157 ஆக இருந்தது. நேற்றிரவு இது 198 ஆக அதிகரித்து, இன்று காலையில் 205 என்ற அளவுக்கு உயர்ந்தது. அதனால் அவருக்கு இன்சுலின் கொடுக்கப்படுகிறது. மேலும், சசிகலா வழக்கமான உணவுகளை எடுத்து கொள்வதாகவும், சாதாரண வார்டுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 2 வாரங்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும். அதனடிப்படையில், பிப்ரவரி 5, 6 தேதிகளில்தான் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதாக ஆவணங்கள் அளிக்கப்படும் என்றும் அதனால் மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் சசிகலா தங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.