சென்னை கொட்டிவாக்கத்தில் டைல்ஸ் ஒட்டியதற்கு பணம் தராததால், ஆத்திரத்தில் வயதான தம்பதியினர் இருவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிய வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொட்டிவாக்கம் ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளிநாயகி. தம்பதியினரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.
மாயாண்டி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் டைல்ஸ் ஒட்டுவதற்காக வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆலன் என்பவரை பேசியிருந்தனர். இதற்காக, ஆலனிடம் முன்பணம் வழங்கப்பட்டது. இதன்பிறகு, டைல்ஸ் ஒட்டும் பணி முடிக்கப்பட்டது.
ஆனால், டைல்ஸ் சரியாக ஒட்டவில்லை என்று கூறி, ஆலனுக்கு மாயாண்டி பாக்கி பணத்தை தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆலன், தனது கூட்டாளிகளும் விரைந்து மாயாண்டி மற்றும் வள்ளி நாயகி இருவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 13 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து தம்பதியினரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அந்த கட்டிடத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், ஆலனின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, ஆலனை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.